-->
Breaking News
Loading...

அரிவாள் ஜீவிதம் ..

அரிவாள் ஜீவிதம் ..

இது ஒரு மலையாள நாவல். எழுதியவர் ஜோஸ் பாழூக்காரன். 

தமிழ் பொழிபெயர்ப்பு யூமா. வாசுகி.

அரிவாள் ஜீவிதம் என்றதும். சண்டையும், கோபமும், வன்மும் நிரம்பிய ஒரு கதை என்று நினைக்க வைக்கும். ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு பெரும் வலியின் கதை இது.

பழங்குடி மக்களின் பெரும் துயரமான அரிவாள் நோயைப் பற்றி சொல்கிறது நாவல்.

அரிவாள் நோய் வந்தவர்களின் இரத்த சிவப்பணுக்கள் ஊட்டச் சத்து குறைபாட்டால் அரிவாள் போல வளைந்து போகிறது.பெரும் வலியில் துடித்துக் கிடப்பதே வாழ்வாகி விடுகின்றது.முழங்கால், கை, கால் வீங்கி நடக்கவும் சக்தியற்று போகும். பின்பு அரிவாள் செல்கள் கல்லீரலில் சேர்ந்து அதன் இயக்கத்தை நிறுத்தி மரணம் நிகழ்கின்றது.

இதற்கு மருந்து எதுவும் கிடையாது. ஊட்டச் சத்து மாத்திரைகள் தான் கிடைக்கும்.

இந்தக் கொடும் நோய் வந்தவர்கள் அதை வெளியில் சொல்வதில்லை.

அவர்கள் வலியில் கதறித் துடித்து தரையில் புரண்டு அழுவதைப் பார்த்து அவர்களுக்கு பேய் பிடித்து விட்டது என்று மந்திரம் போடுபவர்கள் ஒருபுறம்.

இரும்பைச் சூடாக்கி உடம்பில் வைத்து வைத்தியம் என்று மரணத்திற்கு ஆளாக்கும் மடத் தனம் ஒருபுறம். 

வலிக்கும் போது உடலில் அட்டைகளைக் கடிக்க விட்டு ரத்தம் குறைபவர்கள் இன்னொரு புறம்.

பிறந்த குழந்தை முதல் சிறுவர் பெரியவர் பேதமின்றி எல்லோருக்கும் வருகிறது இந்த நோய். 

யாருக்கும் சொல்லாமல் மறைத்தே மறைந்து போய் விடுகிறார்கள் அனைவரும்.

இளைஞர்கள் உள்ளூர் பெண்களைப் புறக்கணித்து நகரத்து பெண்களைத் திருமணம் செய்யத் துவங்குகிறார்கள்.

உள்ளூர் பெண்கள் திருமண வயது கடந்து காத்திருந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

வெளியூர் பெண்களைத் திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கும் வருகிறது அரிவாள் நோய். 

கேரளாவின் வயநாட்டில் உள்ள திருநெல்லி என்ற பழங்குடி கிராமும் அதை சுற்றியுள்ள பழங்குடி மக்களின் கிராமங்கள் தான் கதையின் நிகழ்விடம்.

கன்னடமும் மலையாளமும் கலந்து பேசும் செட்டி பழங்குடியில் பிறந்தவள் ஜெகந்தி.

யானைக் காடுகளை கடந்து பள்ளியில் சில ஆண்டுகள் படித்தவள். அவளுக்கு வருகிறது அரிவாள் நோய். அவள் திருமணம் தடைபடுகிறது.

மானந்தா வாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கு ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வலியில் சாகும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுகிறாள் ஜெகந்தி.

உடல் வலியைத் தாங்கிய படி இயங்குகிறாள் ஜெகந்தி. அரிவாள் நோயளிகளைக் கண்டு பிடித்து ஒரு சங்கம் அமைக்கப் போராடுகிறாள்.

அரிவாள் நோயின் கொடுமைகளை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும். அரிவாள் நோய் உள்ளவர்களுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வை மருத்துவர்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும். அரசு அரிவாள் நோயாளிக்கென தனி மருத்துவமனை அமைக்க வேண்டும். மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
இவை தான் அவளின் லட்சியம்.

இணக்கமான சில பேரோடு அவள் நடத்தும் போராட்டமே இந் நாவல்.

 ‘ வாழு.. வாழத் தூண்டு ’ என்பது தான்ஜெகந்தியின் கோட்பாடு.

உலகம் முழுதும் உள்ள அனைத்து பழங்குடிகளுக்கும் பொதுவானதாக இந்த சிக்சி செல் அமீபியா என்கிற அரிவாள் நோய் உள்ளது என்று அறிய முடிகிறது.

அரிவாள் நோயைப் பற்றிய பெரும் விழிப்புணர்வுக்கு இந் நாவல் பயன் பட்டிருக்கிறது.

யூமா வாசுகியின் சரளமான மொழிபெயர்ப்பு இந்நூலின் சிறப்பு,

இதை தமிழுக்கு வழங்கிய என்.சி.பி.ஹெச் க்கு நன்றி சொல்ல வேண்டும்.

🌙

பொன் சுதா 

முகநூல் பதிவு

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU