-->
Breaking News
Loading...

திருமண சட்டங்கள்

*இந்துத் திருமணச் சட்ட‍ம்* 
 
*1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. அச்சட்ட‍மானது இந்துக்கள், புத்த‍மதத்தினை பின்பற்றுபவர்கள், அல்ல‍து சீக்கியர்களுக்கு இச்ச‍ட்ட‍ம் பொருந்தும்.

 ஆனால் முகமதியர்கள், கிறித்துவர்கள், பார்சி அல்ல‍து யூதர் மதத்தினைச் *சேர்ந்தவர்களுக்கு* *இச்சட்ட‍ம் பொருந்தாது.* 

*இந்து திருமணத்தினை பதிவு செய்ய முடியும்.*

*ஒரு இந்து* திருமணத்திற்கான தேவைகள் 
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍த்தின் பிரிவு 5ன்படி முறையான திருமணம் ஒன்றிற்கு தேவையான நிபந்தனை எடுத்துரைக்கின்றது.


1. திருமணத்தின் போது (தரப்பினர்) வெறும், உயிருடன் இருக்கும் வேறு ஒரு வாழ்க்கைத் துணையை கொண்டிருக்க‍க் கூடாது.


2. மனநிலை சரியில்லாதக் காரணத்தால் முறையான இசைவை கொடுக்க‍ முடியாத நிலையில் தரப்பினர் இருக்க‍க் கூடாது.


அ. முறையான இசைவை கொடுக்க‍க் கூடியவராக இருந்தாலும், திருமணத்திற்கும், குழந்தை பெறுவதற்கும் தகுதியற்ற வகையில் மனநிலை பாதிக்க‍ப்பட்டு இருக்க‍க்கூடாது.


ஆ. காக்காய் வலிப்பு அல்ல‍து பித்து நிலை ஆகியவற்றிற்கு அடிக்கடி உட்பட்ட‍வராக இருக்க‍க் கூடாது.


3. திருமணத்தின் போது மணமகன் 21 வயதினையும், மணமகள் 18 வயதினையும் நிறைவு பெற்ற‍வராக இருத்தல் வேண்டும்.


4. வழக்காறு அனுமதித்தாலன்றி, தரப்பினர் இருவரும் சபித்தர்களாக இருத்தல் கூடாது.

 சபிந்தர்கள் என்பவர்கள் பொது மூதாதையர் வழியாக குறுதி தொடர்பு கொண்ட உறவு முறையினர் இந்த உறவு முறை தாயின் வழியில் 3 தலைமுறைகளையும் தந்தையின் வழியில் 5 தலைமுறைகளையும் கொண்டதாகும்.

திருமணத் தீர்வழிகள் 
இந்து திருமணச் சட்ட‍மானது ஓர் இளம் பெண்ணுக்கு 4 வகையான திருமண தீர்வழிகள் அளிக்கின்றது. 

இந்த நான்கும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுப்பட்ட‍தாகும். ஒவ்வொன்றும் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன•


அ) கலந்துறை உரிமை மிட்டடைவிப்பு 
இப்பிரிவின் படி திருமணத்தைப் பாதுகாத்து, தரப்பினரை ஒன்று சேர வைக்கும் நோக்க‍ம் கொண்டது. தக்க‍ காரணமின்றி மணவாழ்க்கையிலிருந்து கணவன் விலகிச் சென்றால், சட்ட‍க் கடமையிலிருந்து சட்ட‍ ஒப்ப‍ந்தத்திலிருந்து விலகிச் செல்கிறார் என்று பொருளாகும். எனவே பிரிவு 9-ன் கீழ் மனைவி நீதிமன்றம் சென்று தீர்வு பெற உரிமையுண்டு.

 இதனால் பாதிக்க‍ப்பட்ட‍ உறவு சீரடைய வாய்ப்பு உண்டு. தவிர திருமண உறவைத் துண்டிக்காமலேயே அல்ல‍து தீர்ப்பு வழி பிரிவு கோராமலேயே இச்சட்ட‍த்தின் பிரிவுகள் 24 மற்றும் 25 வாயிலாக வழக்கிடையே வாழ்க்கைப் பொருளதவியும், நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியும் கோர உரிமை உண்டு. 

மேலும் நீதிமன்றம் உத்த‍ரவு பிறப்பிக்கும் கணவன் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் மணவாழ்க்கையில் இணைய மறுக்கும் பொழுது மண முறிவுக்கு மனைவி மனு கொடுக்க‍லாம்.


ஆ. தீர்ப்பு வழி பிரிவு (பிரிவு10)
தீர்ப்பு வழி பிரிவு என்பது சற்று வேறுபட்ட‍ தீர்வழியாகும். தரப்பினரைத் தனியே வாழ அனுமதிக்கிறது. இது தவிர மண வாழ்க்கையை நிறுத்தி வைக்கிறது. கணவனும், மனைவியும் ஒன்றாக இணைந்து வாழும் கட்டுப்பாடு இல்லை. ஆனால் திருமணம் கலைக்கப்படுவதில்லை. தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இது அவர்கள் மீண்டும் இணைவதற்கும் தங்களுக்குள் உறவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், வாய்ப்பினை அளக்கிறது. இவ்வாறு பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ விருப்ப‍ம கொள்வாரேயானல் அதற்கு தடை கிடையாது.

 பிரிவு 10(2)-ன் கீழ் மனுத்தாக்க‍ல் செய்து பிறப்பிக்க‍ப்பட்ட‍ தீர்ப்பினைத் தள்ளுபடி செய்ய‍க் கோரி விண்ண‍ப்பிக்க‍லாம். ஆனால் தரப்பினர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் மணவாழ்க்கை திரும்ப அமையாவிடில் தீர்ப்பாணை பிறப்பித்து  1 ஆண்டு காலம் கடந்திருந்தால் இதனையே காரணமாக கொண்டு பிரிவு 13 (1ஏ)1) இன் கீழ் மணமுறிவிற்கு மனுத்தாக்கல் செய்ய முடியும்.


பிரிவு 10-ன் கீழ்  கூறப்பட்டுள்ள‍ தீர்ப்பு வழிப்பிரிவு என்ற தீர்வுக்கான காரணங்களும் மணமுறிவிற்கான காரணங்களும் 1976ஆம் ஆண்டு சட்ட‍த்திருத்த‍ப்பிறகு ஒன்றேயாகும். 

இதில் மொத்த‍ம் 13 காரணங்கள் உள்ள‍ன• முதல் ஒன்பதும் கணவனுக்கும், மனைவிக்கும் உரிய பொது காரணங்கள் கடைசி 4 காரணங்களும் மனைவிக்கு மட்டும் கிடைக்க‍ கூடிய தனிக்காரணங்களாகும்.


1. திருமணத்திற்கு அப்பாற்பட்டு கொள்ளும் உடலுறவு


2. இரண்டாண்டுகளுக்கு குறையாத, கைவிடுதல்


3. கொடுமைப்படுத்துதல்

4. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்

5. பித்து நிலை அல்ல‍து மனநிலை
 ஒழுங்கின்மை

6. பரவக்கூடிய வகையில் உள்ள‍ (மேகநோய்)

7. குணப்படுத்த‍ முடியாத கொடிய தொழுநோய்

8. துறவுநிலை மேற்கொள்ள‍ மற்றும்

9. உயிரோடு இருக்கிறாரா என அறியப்படாமல் இருத்த‍ல் ஆகியவை ஆகும்.

மனைவிக்கு கிடைக்கும் காரணங்கள்...


1. இச்சட்ட‍ம் செயலுக்கு வரும்முன்னர் திருமணம் நடைபெற்று கணவனுக்கு இன்னொரு மனைவி இருத்த‍ல்.

2. கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு எதிரான குற்ற‍ங்களுக்குக் கணவன் தண்டிக்க‍ப்படுதல்

3. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொளுதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து குற்ற‍வியல் நடைமுறைத் தொகுப்பில் 125பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப் பெற்று குறைந்தது ஓராண்டு காலத்திற்கு உடலுறவு இல்லாதிருத்தல்

4. குழந்தைத் திருமணத்தை மறுத்த‍ல் ஆகியவையாகும்.
இ. தீர்ப்பினை வாயிலாக திருமணத்தை ரத்து செய்தல் (பிரிவுகள் 11 மற்றும் 12)
திருமணங்க்ளைப் பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

1. முறையாக செல்லும்படியாக கூடிய திருமணம்

2. இல்லா  நிலையது திருமணம்

3. தவிர்தகு திருமணம்

1. முறையாக செல்லும்படியாகக் கூடிய திருமணம்
இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்விக்க‍ப்படும் திருமணம் முறையான திருமணமாகும்.

2. இல்லா நிலைத் திருமணம்
சட்ட‍த்தின் பார்வையில் இத்திருமணம் கருதப்பட மாட்டாது. இதற்கான காரணங்கள்.

1) வாழ்க்கைத் துணை இருக்கும் போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள‍ல்

2) தடுக்க‍ப்பட்ட‍ உறவிடையே திருமணம்

3) சபிந்தர்களிடையேயான திருமணம்

4) தவிர்தகு திருமணம் (பிரிவு12)

1. உடலுறவு மூலம் திருமணத்தை நிறைவு செய்ய முடியாத குறைபாடு, இக்குறை உடல் கூறாகவோ அல்ல‍து நோயின் காரணமாகவோ இருக்க‍லாம். தரப்பினரின் மனநிலை பொறுத்து அமையலாம்.

2. பித்து நிலையின் காரணமாக ஒருவர் பிறவியிலேயே பித்து பிடித்து இருக்க‍லாம். மூளைக் கோளாறு நோயினால் தரப்பினர் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் மனைவி திருமணப் பந்தத்தினை தவிர்க்க‍ வாய்ப்பு உண்டு.

3. திருமண இசைவைக் கட்டாயமாக அல்ல‍து மோசடியாக பெறுதல் மற்றும் எதிர்மனுதாரரின் கர்ப்ப‍ம் ஆகியவை தவிர்தகு  திருமணமாகும்.
மணமுறிவு பிரிவு (13) 
இந்துச் சட்ட‍த்தைப் பொறுத்த‍வரை மணமுறிவு என்பது ஒரு புரட்சிகரமான மாறுதல் ஆகும். 1955ம் ஆண்டின் இந்துத் திருமணச் சட்ட‍ம் அனைவருக்கும் பொருந்துமாறு மணமுறிவை கொண்டு வந்துள்ள‍து. 1978ஆம் ஆண்டு திருத்த‍ம் மணமுறிவைப் பொறுத்து மிகவும் எளிதாகிவிட்டது.
ம‌ணமுறிவுக்கான காரணங்கள்......

1. தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் அன்றி வேறுயாருடனாவது தன்னிச்சையாக உடலுறவு கொள்ளுதல்

2. கொடுமைப்படுத்துதல்

3. இரண்டு ஆண்டுகால அளவிற்கு கைவிடுதல்

4. பித்து நிலை

5. கடுமையான மற்றும் குணப்படுத்த‍ முடியாத தொழுநோய்

6. தொற்றிக் கொள்ள‍க்கூடிய மேகநோய்

7. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்

8. உலகைத் துறந்து துறவு நிலை மேற்கொள்ள‍ல்

9. ஏழு (7) ஆண்டுகாலம் உயிருடன் இருக்கிறாரா என்று அளிவிக்கப்பாமல் இருத்த‍ல்

10. நீதி வழிப் பிரிவிற்கான தீர்ப்பாணைக்குப் பின்பவரும் மீண்டும் மணவாழ்க்கையை தொடராதிருத்தல்

11. சேர்ந்து வாழவேண்டும் என்று தீர்ப்பாணை அளிக்க‍ப்பட்டும் மீண்டும் சேர்ந்து வாழாமல் இருத்த‍ல்

12. ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான  மணமுறிவு

13. மனைவிக்குமட்டும் கிடைக்கும் சிறப்புக்காரணங்கள்

14. சட்ட‍ம் செயலுக்கு வரும் முன் திருமணம் முடிந்து கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்டு மனைவி உயிருடன் இருந்தால்

15. கணவன் கற்பழிப்பு அல்ல‍து இயற்கைக்கு முரணாக குற்ற‍ங்களால் தண்டிக்கப்பட்டிருந்தல்

16. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொருள் உதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து 1973ம்  ஆண்டின் குற்ற‍ நடைமுறைத் தொகுப்பின் 125 வது பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப்ப் பெற்று ஓராண்டு காலத்திற்கு மேல் உடலுறவு இல்லாதிருத்தல்.
ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான மணமுறிவு (பிரிவு 118) 
இது 1978ம் ஆண்டு முதல் கிடைக்கும் புதிய தீர்வழியாகும்.

 இப்பிரிவின்படி.....

1. திருமணத் தரப்பினர் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

2. அவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்ப‍து ஓராண்டு அல்ல‍து அதற்கு மேற்பட்டு இருத்த‍ல் வேண்டும்.

3. இருவரும் தங்களது திருமணம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் ஒப்புக் கொண்டு இருக்க‍ வேண்டும்.

4. நீதிமன்றதிதல் இருவரும் சேர்ந்து மனுத்தாக்க‍ல் செய்திட வேண்டும்

5. ஒப்புதலானது மனுத்தாக்க‍ல் செய்த பதினெட்டு மாதங்களுக்குள் அல்ல‍து வழக்கு விசாரணைக்கு வரும்முன் எந்த தரப்பினராலும் திரும்பப் பெற்றிருக்க‍க்கூடாது.
எந்த இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும்?

பிரிவு 19ன் படி மாவட்ட‍ நீதிமன்றத்தில் இதற்கான மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும். குடும்ப நல நீதி மன்றங்கள் நிறுவப்பட்டிருந்தால் அதன் எல்லைக்குட்பட்ட‍ வரம்புக்கு உட்பட்ட‍ இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய வேண்டும்.

 1. திருமணம் நிகழ்ந்த இடம் அல்ல‍து

 2 . மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும் போது எதிர்மனுதாரர் குடியிருக்கும் இடம் அல்ல‍து

 3. திருமணத் தரப்பினர் இறுதியாக வசித்த இடம் அல்ல‍து

 4. மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும்போது மனுதாரர் வசிக்கும் இடம் போன்ற இடங்களுக்கு ஆள்வரை வரம்பு கொண்ட இடங்களில் மனுத்தாக்க‍ல் செய்யலாம்.


***
கிறித்து திருமணச் சட்ட‍ம் 27......

1872 ஆம் ஆண்டு இந்திய கிறித்துவ திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்ட‍து. இச்சட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்வோர் இருவரும் கிறித்துவராக இருக்க‍ வேண்டும். இருவரில் ஒருவர் கிறித்துவர் இல்லாதவராக இருக்க‍லாம். பிரிவு 5 கூறப்பட்ட‍வர்களால் மட்டுமே திருமணம் செய்துவிக்க‍ப்பட வேண்டும். இதில் நடத்தப்பட வேண்டிய இடம், செய்விக்க‍ப்பட வேண்டிய நேரம் ஆகியவை கூறப்பட்டுள்ள‍ன•

 பிரிவு 60 கிறித்துவ திருமணத்திற்கான நிபந்தனைகள் கூறுகிறது......


* அதன்படி ஆண் 21 வயதிற்கும் பெண் 18 வயதிற்கும் குறைவாக இருத்தல் கூடாது.

* உயிருட‌ன் கூடி மனைவியோ அல்ல‍து கணவனோ அவர்களுக்கு இருக்க‍க் கூடாது.

* பிரிவு 9ல் கூறப்பட்ட உரிமம் பெற்ற‍வரின் முன்னிலையிலும் மற்றும் குறைந்தது இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும் திருமணம் நடத்த‍ப்பட வேண்டும். 

மணமக்க‍ள் அடுத்த‍வரை கணவனாக அல்ல‍து மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிறித்துவ திருமணத்தில் விவாகரத்து 
பொதுவாக மேலைநாடுகளில் கிறித்துவ தம்பதியினர் செய்து கொள்வதற்கு 18 வகையான காரணங்கள் உள்ள‍ன•

 ஆனால் இந்திய கிறித்து திருமணச் சட்ட‍ம் 1872 மறும் இந்திய கிறித்துவ விவாகரத்து சட்ட‍ம் 1889-ன் படி 5 காரணங்கள் மட்டுமே விவாகரத்துக்கு எடுத்துக் கொள்ள‍ப்படுகிறது.

1. பிறன்மனை நோக்குதல்

2. கொடுமை

3. பிரிந்து இருத்த‍ல்

4. ஆண்மையின்மை

5. கடுமையான நோய்

1. பிறன்பனை நோக்குதல் 
கிறித்துவ சட்ட‍த்தின் படி பிறன்மனை நோக்குதல் என்ற ஒரே காரணத்திற்காக பெண் விவாகரது கோரமுடியாது. கொடுமைப்படுத்த‍ப்பட்டார் என்ற காரணம் இருந்தால் மட்டும் பெண் விவாகரத்து கோர முடியும். இருந்தபோதிலும் சில வருடங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன்பு பிறன்மனை நோக்குதல் இருந்தாலே மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம் என்று கூறப்பட்டுள்ள‍து.

2. கொடுமைக்கு உள்ளாதல் 
கொடுமை என்பது உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ள‍தைப்பற்றி சட்ட‍த்தில் குறிப்பிட்டுள்ள‍னர். பிறன்மனை நோக்குதல் மற்றும் கொடுமைக்கு உள்ளாதல் என்ற காரணங்களாக கிறித்துவ பெண் மணவிலக்கு கோரலாம். எவ்வாறு இருந்த போதிலும் தற்பொழுது கொடுமைக்கு ஆளாதல் என்ற காரணத்தினை வைத்து ஒரு விவாகரத்து கோரலாம்.

3. பிரிந்து வாழுதல்.....
பிரிந்து வாழுதல் என்பது காரணங்கள் கூறப்படுகிறது மனைவியுடன் கணவனோ கணவனுடன் மனைவியோ சேர்ந்து வாழ மறுப்பது, எவ்வித காரணமும் இல்லாமல் கணவனோ மனைவியோ காணாமல் போவது, ஏழு வருடங்கள் வரை கணவனோ, மனைவியோ காணாமல் போனால் அவர் பிரிந்து வாழ்வதாக கருதப்பட்டு விவாகரத்து கோரலாம்.


4. ஆண்மையின்னை 
க‌ணவனோ, மனைவியோ திருமணக் கடமையினை நிறைவேற்றாமல் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்க‍ப்பட்டிருக்கும் போது அதனை காரணம் காட்டி விவாரத்து கோரலாம்.

5. கடுமையான நோய் 
ம‌னநோய் மற்றும் உடல்நலக் கோளாறு மற்றும் பாலியல் நோய் காரணமாக விவாகரத்து கோரலாம். தொழுநோயால் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் அதனை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது. ஆனால் இந்து திருமணச் சட்ட‍த்தின்படி விவாகரத்து கோரலாம்.
விவாகரத்து சட்ட‍த்திருத்த‍ம் பின்பு
பிரிவு 10
விவாகரத்து சம்பந்தமாக சட்ட‍த்திருத்த‍ம் கொண்டு வரப்பட்ட‍து.

 அதன்படி கீழ்க்காணும் காரணங்களுக்காக கணவன், மனைவி  இருவருமே விவாகரத்து கோரலாம்.

1. பிறன் மனை நோக்குதல்

2. கொடுமைக்கு ஆளாகுதல்
இவ்வாறாக சட்ட‍த்தில் சொல்லப்பட்ட‍ போதிலும் கீழ்க்காணும் காரணங்களுக்காக மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெற வழிசெய்துள்ள‍து.

1. கற்பழித்தல்

2. மிருகத்தனமாக நடந்து கொள்ளுதல்

3. இயற்கைக்கு மாறாக மிருகங்களுடன் கொள்ளுதல்

இவை தவிர பிரிவு 10ஏ ன் படி கணவனும், மனைவியும் மனமொத்து பிரிந்து கொள்ள‍ மனு செய்யலாம்.
விவாகரத்தினால் என்ன‍ உரிமை கிடைக்கின்றது.

1. விவாகரத்து மூலம் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது தவிர்க்க‍ப்படுகிறது.

2. விவாகரத்து மூலம் கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொள்ள‍லாம்.
குழந்தைகளின் நலன் பாதிக்க‍ப்படாமல் விவாகரத்து ஏற்பட்ட‍ பொழுது அவர்களின் நலன் பெற்றோர்களால் பாதுகாக்க‍ப்படுகிறது. குழந்தைகளை யார் நன்றாக பராமரிப்பார்களோ அவர்களிடமே குழந்தை இருக்கும் ஆனால் இந்திய நீதி மன்றங்களில் குழந்தைகளை பராமரிப்பு தாயிடமே வழங்கப்படுகின்றன• இவை விவாகரத்து நடவடிக்கையுடன் சேர்ந்தே நடத்தப்படுகின்றன•

****

முகமதியர் திருமணச் சட்ட‍ம் 29

இஸ்லாமிய சட்ட‍த்தில் திருமணம் அல்ல‍து நிக்கா என்பது ஓர் உரிமையில் ஒப்ப‍ந்தமாகும். முகமதியர்களைப் பொறுத்த‍வரை திருமணத்தைக் குறித்து சட்ட‍ம் ஏதும் இல்லை. அவர்கள் தங்களது இன்முறை சட்ட‍த்தின்படி ஆளப்படுவர்.

 இஸ்லாமிய திருமணம் ஓர் ஒப்ப‍ந்தம் ஆகும்.

1. திருமணத் தரப்பினர் (திட சித்த‍ம்) உள்ள‍வராகவும்....

2. பருவம் அடைந்தவராகவும், இருக்க‍ வேண்டும். பதினைந்து வயது நிரம்பியவர் திருமணம் செய்து கொள்ள‍லாம்.

3. திருமணத்திற்கான பரிவுரையும் ஏற்புரையும் செய்வது இரு ஆண் சாட்சிகள் அல்ல‍து 1 ஆண் மற்றும் இரு பெண் சாட்சிகள் முன்னிலையில் இருக்க‍ வேண்டும்.

4. திருமண தரப்பினர் இடையே தடைசெய்ய‍ப்பட்ட‍ உறவுமுறை இருக்க‍க்கூடாது.

5. ஒரு முஸ்லீம் பெண்மணி முஸ்லிம் அல்லாதவரை மணக்க‍ இயலாது.

6. ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

7. ஏழு வயதுக்கு உட்பட்ட‍வர் செய்து கொள்ளும் திருமணம் இல்லாநிலையது ஆகும்.

முகமதியர் கட்ட‍த்தில் திருமணத்தைக் கலைத்திட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி காரணங்கள் கொடுக்க‍ப்பட்டுள்ள‍ன•

 ஒரு முகமதிய ஆண் தன்னிச்சையாக நீதிமன்றம் வாயிலாக அல்லாமல் தாமாக தக்க காரணம் ஏதும் கூறாமல் திருமணத்தைக் கலைக்க முடியம். 
இது தலாக் என்று அழைக்கப்படுகிறது.

 ஒரு முகமதியப் பெண்ணுக்கு நீதிமன்றம் வாயிலாக 1939ஆம் ஆண்டில் முஸ்லிம் திருமணக் கலைப்புச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. கீழ்க்காணும் காரணங்களுக்காக ஒரு முகமதிய பெண் மணமுறிவு கோரலாம்...

 அவை....

* நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் இருக்கும் இடம் அறியப்படாமல் இருத்த‍ல்

* இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் கணவன், மனைவியை பராமரிக்காமல் இருத்தல்

* ஏழாண்டு காலத்திற்கு மேற்பட்டு கணவன் சிறைத்தண்டனை பெற்றிருத்தல்

* மூன்றாண்டு காலத்திற்கு மேல் மனைவியுடன் ஒன்றிணைந்து வாழ மறுத்தல் அல்ல‍து தவறுதல்

* திருமணத்தின் போது கணவன், பித்து பிடித்து, மனநிலை சரியில்லாமல் இருந்து அது தொடர்ந்தால்

* இரண்டாண்டுகளுக்கு மேற்பட்டு கணவன், பித்து நிலையினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல் அல்ல‍து தொழுநோய் அல்ல‍து கடும் மேகநோயினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல்.

* பருவம் அடைந்தும் (பதினைந்து வயது ஆனதும்) மனைவி திருமணத்தை மறுதலித்தல்.

* மனைவியைக் கணவன் கொடுமைப்படுத்துதல்,

 மேற்குறித்த காரணங்களுடன் பிரிவு-4ன்கீழ் குறிப்பிட்ட கணவனின் மத மாற்ற‍ம் ஒரு கூடுதல் காரணமாகும்.

இவைகள் ஒரு மனைவிக்கு கிடைக்கக்கூடிய மணமுறிவுக்கான காரணங்கள் ஆகும்.
மேற்குறிப்பிட்ட‍ சில காரணங்களுடன் வேறு சில காரணங்களும் மணமுறிவிற்காக ஒரு முக்கிய பெண்மணிக்கு அளிக்கப்பட்டுள்ள‍து.

 இதில் குலா என்பது ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலானது. இதன்படி மனைவி, கணவனிடம் அதிருப்தியுற்றால் திருமண ஒப்ப‍ந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அதற்கான இழப்பீடு அளிப்பதாகவும் கூறலாம். 

இதனை கணவன், ஏற்றுக்கொண்டால் உடனடியாக மணமுறிவு ஏற்படும். அதற்கான மறுபயன் தன்னுடைய மணக்கொடையை விட்டுக் கொடுப்பதாக இருக்க‍லாம்.


முபராத் என்னும் மணமுறிவிலும் ஒருவருக்கொருவர் இசைவின் பேரில் திருமணம் கலைக்கப்படுகிறது. தலாக் இ தஃபிஸ் மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம். இதில் மனைவி தன் அதிகாரத்தினை காட்டி விவாகரத்து செய்ய‍லாம்.

இஸ்லாமிய திருமணமும் இந்திய சட்ட‍மும் 
இஸ்லாமிய முறையின்படி திருமணம் பதிவு செய்ய‍ப்பட்டு இருப்பின் அப்பெண்களுக்கு பெண்கள் வன்கொடுமை சட்ட‍ம் பாதுகாப்பு அளிக்கின்றது

 பெண் வன்கொடுமைச் சட்ட‍ம் பிரிவு 498ஏ , இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் படி கொடுமைக்கு ஆளானாலும் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961போன்றவைகளும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கின்றது. 

மேலும் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் 1954-ன் படி பதிவுத் திருமணம் செய்ய‍ப்பட்டு இருந்தாலும் இஸ்லாமிய பெண்களுக்குப் பொருந்தும்.
இஸ்லாமிய பெண்களின் உரிமைச் சட்ட‍ம் 1986
இச்சட்ட‍த்தின்படி கணவன், மனைவியை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட‍வர், மனைவிக்கு கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு. 

குற்ற நீதி நடுவர் மன்றத்தில் ஜீவனாம்சம் பெறுவதற்கு மனுத்தாக்க‍ல் செய்ய‍ முடியும்.

* விவாகரத்து பெற்ற‍வராக இருக்க வேண்டும்.

* திருமணத்தின் பொழுது இருந்த வாழ்க்கைத் தரம்
* முன்னாள் கணவரிடமிருந்து பெறலாம்.

அவர் ஜீவனாம்சம் வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் பினை ஆணை பிறப்பித்து அவரிடமிருந்து தொகையினை பெறலாம். ஆனால் விவாகரத்து பெற்ற‍ பின்பு 2ம் திருமணம் செய்து கொண்டுவிட்டால் ஜீவனாம்சம் கேட்க முடியாது.

சிறப்புத் திருமணச் சட்ட‍ம்......

1954ம் ஆண்டில் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்டுள்ள‍து.

 இது பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர். தங்களிடையே திருமணம் செய்து கொள்ள‍ வழி கோருகிறது. ஓர் இந்து இன்னொரு இந்துவை இச்ச‍ட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள‍லாம்.

 பொதுவாக இவைப் பதிவுத் திருமணம் என்று அழைக்கப்படுகின்றன• இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகள், திருமணத் தீர்வழிகள் போன்றவை இந்து திருமணச் சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍து போன்றதாகும்.

****
வ‌ரதட்சனை தடுப்புச் சட்ட‍ம் 1961 – 11.....

திருமணத்திற்கு வரதட்சனை கொடுப்ப‍தாக பெண்ணின் பெற்றோர்கள் வாக்கு அளித்து பிறகு கொடுக்க முடியாமல் போனால் திருமணம் முடிந்த பின் அந்த பெண், அதற்காக துன்புறுத்த‍ப்படுவதோ அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதோ அல்ல‍து அந்த பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் அளவு கொடுமை புரிவதோ அல்ல‍து அப்பெண்ணை கொலைசெய்வது போன்ற நிகழ்ச்சிகள் அதிகமானதால் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட‍து.

வ‌ரதட்சனை இந்திய சமுதாயத்தில் ஒரு சாபக்கேடாக கருதப்படுகிறது. மணப்பெண் எரிப்பு வழக்குகள் , வரதட்சனை மரணங்கள், வரதட்சனை கொடுமைகள் முதலி யன சமுதாயத்தில் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. வரதட்சனை தொடர்பான குற்ற‍ங்கள் குறித்த சட்ட‍ங்கள் கடுமையானவை.
சட்ட‍ம் பற்றிய விளக்க‍ம் 
நேரடியாகவோ, மறைமுகமாவோ கீழ்க்காணும் வகையில் தரப்படும் அல்ல‍து தருவதாக ஒப்புக் கொள்ள‍ப்படும் தொகையோ அல்ல‍து சொத்தோ வரதட்சனையாக கருதப்படும்.

* திருமணம் செய்து கொள்ளும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினரால்..

* திருமணம் செய்து கொள்ளும் மணமகள் அல்ல‍து மணமகளின் பெற்றோரால்.....

* வேறு மற்றொரு நபரால்.....

* திருமணம் செய்து கொள்ளும் ஏதாவது ஒரு தரப்பினரால்.....

* திருமணம் தொடர்பானவர் இடையிலோ.....

* முஸ்லீம் திருமண சட்ட‍ப்படி அச்சமுதாயத்தினரிடையே நிலவும் மகர்  போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை.
சம்பிரதாயப்படிவழங்கப்படும் பரிசுகள், பெற்றோரால் சுய விருப்ப‍த்தின் அடிப்படையில் தரப்படும் பொருட்கள் போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை. எனினும் அவ்வாறு பெறப்படும் பொருட்களின் பட்டியல் தயாரிக்க‍ப்பட்டு மணமகன் மற்றும் மணமகளின் கையொப்ப‍த்துடன் பராமரிக்க‍ப்பட வேண்டும் என 1985ம் ஆண்டில் வரதட்சனை தடுப்பு விதிகள் (மணமக்க‍ளுக்கு பரிசாக தரப்படும் பொருட்களின் பட்டியல் பாதுகாப்பு) பரிந்துரைக்கப்படுகிறது.

தண்டனைகள்.....

1. வரதட்சனை வாங்குவது கொடுப்ப‍து மற்றும் அதற்கென தூண்டுவது ஆகியவை சட்ட‍ப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15,000- அல்ல‍து வரதட்சனையாக பெற்ற தொகை இவற்றில் எது அதிகமோ அவ்வ‍ளவு அபராதமும் தண்டனையாக விதிக்க‍க் கூடிய குற்ற‍ங்களாகும்.

2. வரதட்சனை கேட்டு வாங்குவதும் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்கத் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.15,000- அபராதமும் விதிக்கக் கூடிய அளவு குற்ற‍ங்களாகும்.

3. மணமகளுக்கு வரதட்சனை தொகையை குறிப்பிட்ட‍ காலத்திற்குள் மாற்றித் தராவிட்டால் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்க‍த் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.5,000- முதல் ரூ.10,000- வரை அபராதமும் தண்டனையும் விதிக்க‍ப்படும்.

4. இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்கள் அனைத்தும் அபராதம் செலுத்த‍த்தக்க‍ பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை.

5. மேலும் இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்களில், கைது செய்தல், மற்றும் குற்ற‍வியல் நடைமுறை சட்ட‍ப் பரிவு 42ல் கூறியுள்ள‍வற்றைத் தவிர, விசாரணை போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

 எனவே இச்சட்ட‍த்தின் கீழ் ஒரு நபரைக் கைது செய்ய ஆணை கண்டிப்பாக பெற வேண்டும்.

த‌வறு செய்பவர்களை தண்டிக்கும் வழிமுறைகள்.....

* வரதட்சனை தடுப்பு அலுவலர் விசாரிக்க‍ப்பட்ட‍ புகார்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அவருடைய கருத்துடன் குற்ற‍ப்பிரிவு வழக்கு (173-ன் படி அனுப்ப வேண்டும்.

* வரதட்சனை தடுப்பு அலுவலர் குற்றப்பிரிவு 10 எண். 5ன் படி நீதிமன்ற ஆணை இல்லாமலேயே குற்ற‍வாளியை கைது செய்வதற்கு காவல்துறை அலுவலருக்கு உள்ள‍ அதிகாரமும் பின்ன‍ர் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அனுப்ப‍வும், அதிகாரம் படைத்துள்ளார்.

* வரதட்சனை தடுப்பு உபவிதிகள் 2ன்படி வரதட்சனை தடுப்பு அலுவலர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சோதனை மேற்கொள்ளும்போது அக்குறிப்பிட்ட‍ இடத்தில் உள்ள‍ உள்ளூர்வாசிகள் சேர்ந்து கொள்வதுடன் அவர்களையே சாட்சிகளாக போட்டுக் கொள்ள வேண்டும்.

 அவ்வாறு சாட்சிக்காக அழைக்கப்படும் போது சாட்சிக்கு வரமறுத்தால் இந்திய குற்ற‍வியல் சட்ட‍ப்பிரிவு 187-ன் படி குற்ற‍மாகும்.

வ‌ரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 
* காலம்காலமாக வரதட்சனை காரணங்களுக்காக பெண்கள், கொடுமைப்படுத்த‍ப்பட்டும், கொல்ல‍ப்ப‍ட்டும் வந்திருக்கிறார்கள்.

 இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) அத்தகைய கொடுஞ்செயல் புரிவோரை தண்டிக்கிறது. திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டாலோ, மரணத்திற்கு முன் வரதட்சனையாக கனவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலோ அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.

* இந்திய தண்டனைச் சட்ட‍த்தின்படி 304பி (ஐ.பி.சி.) படி திருமணமான 7 ஆண்டுகளுக்குள் தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டால் அது வரதட்சனை கொடுமையால் ஏறபட்ட‍ மரணமாக கருதப்படுகிறது.

* மரணத்திற்கு முன் வரதட்சனைக்காக கணவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலும் அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.

* வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன•...

 குற்ற‍ங்கள் நிரூபிக்க‍ப்பட்டால் கணவனுக்கும் உறவினர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍ப்படலாம்.

எந்த சட்ட‍ப்பிரிவுகளின் கீழ் புகார் செய்ய‍லாம்...

1880ம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் (ஐ.பி.சி.) சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) 1973ஆம் ஆண்டின் குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍ப்பிரிவு (சி.ஆர்.பி.சி) 154 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவுசெய்ய‍லாம்.

யாரிடம் எப்பொழுது புகார் செய்ய‍லாம்?....

1. அருகிலுள்ள‍ காவல்நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக அல்ல‍து வாய்வார்த்தையாக புகார் செய்ய‍லாம்.

2. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய‍லாம்.

3. சம்பந்தப்பட்ட‍ அதிகாரி புகாரை பெறாவிட்டால், மாவட்ட‍ காவல் ஆணையாளருக்கு நேரிலோ அல்ல‍து தபால் மூலமோ புகாரை அனுப்பி பதிவு செய்ய‍லாம்.

4. காவல்துறை புகாரை பெற மறுத்தால், மாஜிஸ்டிரேட்டை அணுகி காவல்துறைக்கு உத்தரவிட்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவுசெய்ய‍லாம்.

5. காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய‍ மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகி காவல்துறைக்கு உத்த‍ரவிட்டு பதிவு செய்ய வைக்க‍லாம்.

6. குற்ற‍ம் தொடர்பான அனைத்து தகவல்களையும் எடுத்துக் கூறி அவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் பதிவு செய்ய‍ப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

7. முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை பெற்றுக் கொள்ள புகார் அளிப்பவர்களுக்கு முழு உரிமையுண்டு.

8. குற்ற‍த்தில் ஈடுபட்ட‍வர்களின் பெயர், முகவரி, போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. குற்ற‍ம் நடைபெற்ற‍ நாள், தேதி, இடம், நேரம் போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

10. வரதட்சனை மரணம் ஏற்படுத்த‍க் கூடிய காரணங்கள் உதாரணமாக சொத்துக்களுக்காகவோ, அல்ல‍து பணத்திற்காகவோ என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

11. மரணமனைந்தவர் உடலில் காணப்பட்ட‍ காயங்கள் அல்ல‍து தடங்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.

12. மரணத்தைப் பற்றி சாட்சியளிக்க‍க் கூடியவர்களை பற்றியும் குறிப்பிட வேண்டும்.

13. குற்றத்தைப் பற்றி தெரிந்த எவர் வேண்டுமானாலும் புகார் செய்ய‍லாம்.

வ‌ழக்கை எவ்வாறு பதிவுசெய்வது....

1. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் காவல்துறை விசாரணையை தொடங்கும்.

2. சட்ட‍ப்பிரிவு 304பி-ன் கீழ் மாவட்ட‍ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய‍ப்படும்.

3. காவல்துறை கீழ்காண்பவற்றை நிரூபிக்க வேண்டும்.

அ) தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டுள்ள‍தை பிரேத பரிசோதனை மூலம் நிரூபித்தல்.

ஆ) திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டுள்ள‍தை திருமணச் சான்று, திருமண பத்திரிகை புகைப்படங்கள் ஆகியவை மூலம் நிரூபித்தல்

இ) கொடுமைகள் வரதட்சனை தொடர்பாகத்தான் நடந்தது என்று  நிரூபித்தல்

குற்ற‍ம் சாட்டியவர்கள் மேற்கண்டவாறு நிரூபிக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் உறவினர்களால் வரதட்சனைக்காக மரணம் நிகழ்ச்சிக்காக நீதிமன்றம் கருதும், இதற்குமேல் தன்மீது கூறப்பட்டுள்ள‍ வரதட்சனை மரண குற்றத்தை செய்ய வில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍ நபரையே சேரும். 

இந்த குற்ற‍த்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍லாம்.
வ‌ரதட்சனை மரணம் தொடர்பான குற்ற‍ங்கள் அபராதம் செலுத்தத்தக்க‍ மற்றும் பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை

 மேலும் சமாதான உடன்படிக்கை மூலம் தீர்க்க முடியாதவை.
வ‌ழக்குக்காக எந்தக் கட்ட‍ணமும் செலுத்த‍ வேண்டியதில்லை.

மேல் நடவடிக்கைகள்
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
உச்ச‍ நீதிமன்றத்தில் மேல் முறையீடு
மாற்று வழி தீர்வுகள்
காவல்துறை புகாரை பெறாமல் மறுக்கும் பட்சத்தில் சட்ட‍ சேவை ஆணையத்தை (லீகல் சர்வீஸ் அத்தாரிட்டி) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை....

நன்றி.....

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU