-->
Breaking News
Loading...

பஞ்சமி நிலங்கள்

பஞ்சமி_நிலம்⚖👨‍🎓
-----------------------------

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் எனத் தெரியவந்துள்ளது. அந்த நிலங்களை தலித் மக்கள் சாகுபடி செய்ய மிராசுதார்கள் அனுமதிக்கவில்லை. பலவிதங்களிலும் தொந்தரவுகளை அளித்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பெரும்பகுதியான பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமிருந்து மற்றவர்களால் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டன. அவற்றை மீட்பதற்காக அவர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டங்களால் சில தீர்ப்புகளையும் பெற்றுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்த கே.பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக்கொண்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க தருமபுரி கோட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை பிறர் கைப்பற்ற உரிமையில்லை என உறுதியாகத் தெரிவித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது.. (அரசாணை எண் ஜி-1/4868/90 நாள் 15.7.1991) அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் 85,744.01 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10,922.54 ஏக்கர் நிலம் பிறரது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

1996இல் அதிமுக ஆட்சி முடியப்போகும் நேரத்தில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து தலித் மக்களிடம் ஒப்படைப்பதற்கென அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது பணியைத் தொடர முடியவில்லை.

அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் செய்வதற்கென ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மருதமுத்து தலைமையில் நில நிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான மணிவண்ணன், வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கேட்டபோது தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருப்பதாக நில வருவாய் ஆணையர் தகவல் கொடுத்தார். திமுக ஆட்சி முடிந்து 2011இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீதிபதி மருதமுத்து கமிஷன் செயலிழந்துவிட்டது.

பஞ்சமி நிலங்களைக் கண்டறிவது அரசாங்கத்துக்கு இயலாத காரியம் அல்ல. அதற்கென்று தனியே ஆவணங்களை இன்றுவரை வருவாய்த்துறை தனியே பராமரித்து வருகிறது. தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சமி நில பாதுகாப்பு இயக்கம் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,398 ஏக்கர்; வடஆர்க்காடு மாவட்டத்தில் 21,316 ஏக்கர், சேலம் மாவட்டத்தில் 13,601 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 11,102 ஏக்கர், தருமபுரி மாவட்டத்தில் 9,004 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 950 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,892 ஏக்கர் உள்ளிட்ட 72,142 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. ஒரு சிறு அமைப்பே இவ்வளவு நிலங்களை அடையாளம் காண முடியுமென்றால் அரசாங்கம் நினைத்தால் பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் அடையாளம் காண்பது கடினமான பணி அல்ல.

தலித் மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று முக்கியமான தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.
---------------

1.நீதிபதி கே.சந்துருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு:

கோயம்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த வீரநத்தம் கிராமத்தில் விஜிபி பிரேம் நகர், விவேகானந்தா நகர், குமரன் நகர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டுவதற்காக மனை வாங்கிப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அது தலித் மக்களுக்கு ரெவின்யூ போர்டின் நிலை ஆணை எண் 15இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலமாகும். எனவே, அந்த நிலத்தில் வீடு கட்டக் கூடாது எனத் தடை போடப்பட்டதால், வீடு மனைகளை வாங்கியவர்களால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது (VGP Prem Nagar Minvariya Kudiyirupor Sangam Vs The State Of Tamil Nadu, Dt 07.11.2008, High Court of Madras).

 “தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அதன்பிறகு அதை விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், உரிய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தடை ஆணை பெற்ற பிறகே அந்த நிலம் வாங்கப்பட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டிருக்கிறது” எனவும் வாதிடப்பட்டது.

வாதங்கள் எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தனது தீர்ப்பில் பஞ்சமி நிலம் எதனால் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மிராசுதார்கள் எத்தகைய கொடுமைகளை அந்த மக்களுக்குச் செய்தனர் என்பதையும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

1882ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற ரெவின்யூ போர்டு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் சுருக்கத்தைத் தனது தீர்ப்பில் அவர் அட்டவணைப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி தலித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான இடுக்கண்கள் குறித்து Dr. அம்பேத்கர் கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “அவர்கள் வறுமையால் பீடிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிலமற்ற விவசாயக் கூலி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது பொருளாதார நிலையைப் பற்றி மட்டும் பேசினால் போதாது, அப்படிச் சொல்வது உண்மை என்றாலும்கூட. ஒடுக்கப்பட்டோரின் வறிய நிலை அவர்களுக்கு எதிரான சமூகப் பகைமையினால் வந்தது. அந்தப் பகைமையின் விளைவாக அவர்கள் செய்வதற்குத் தயாராக இருந்தாலும் பல்வேறு வேலைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தலித் தொழிலாளர்களை பிற சாதித் தொழிலாளர்களிலிருந்து வேறுபடுத்துகிற, அவர்களுக்கிடையே அடிக்கடி சிக்கல் வருவதற்குக் காரணமாக அமைகிற உண்மை இதுதான்” என்ற கூற்றை (Dr.Babasaheb Ambedkar: Writings and Speeches Vol. No.II: Page Nos.552 and 553) அப்படியே எடுத்துத் தீர்ப்பில் தந்திருக்கிறார். ரெவின்யூ போர்டின் நிலை ஆணை 15ஐயும், 1941ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையையும் (G.O.Ms.2217, Rev. d.1.10.41) விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது, அதன் பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான் விற்க வேண்டும். அப்படி வேறு எவரேனும் அதை வாங்கியிருந்தால் எந்தவித இழப்பீடும் தராமல் அந்த நிலத்தை அவரிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்பதே பஞ்சமி நிலங்களுக்கான நிபந்தனை என விரிவாக விளக்கமளித்தர் நீதிபதி கே.சந்துரு.

 
தலித் மக்களின் நிலம் தொடர்பாக இதேபோன்ற வழக்குகள் வந்தபோது உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளையும் (State of U.P. v. Zahoor Ahmad, reported in (1973) 2 SCC 547; Manchegowda -vs- State of Karnataka, reported in (1984) 3 SCC 301; Lingappa Pochanna Appelwar v. State of Maharashtra, (1985) 1 SCC 479 ; Papaiah v. State of Karnataka, vide its decision reported in (1996) 10 SCC 533) எடுத்துக்காட்டி “பஞ்சமி நிலம் என்பது தலித் மக்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நிலமாக அரசால் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனை மீறப்பட்டிருந்தால் அந்த நிலங்களை அரசே மீண்டும் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கையகப்படுத்தப்படும் நிலத்தை தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு மட்டுமே அரசு தர வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தார்.

2. நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வழங்கிய தீர்ப்பு:

நீதிபதி கே.சந்துரு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன் மற்றும் நீதிபதி பி.பி.எஸ்.ஜனார்தன ராஜா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது (Madras High Court Judgement on V.G.P. Prem Nagar Vs The State Of Tamil Nadu Dt 05.04.2010) அந்த வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மட்டுமின்றி பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தினர் வாங்கியிருந்தால் அது செல்லாது. அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பையே அந்த அமர்வும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

3. நீதிபதி டி. ஹரிபரந்தாமனின் தீர்ப்பு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள கருமாண்டிசெல்லிப் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் வாரிசுகளிடமிருந்து 2.87 ஏக்கர் நிலத்தை ஒருவர் கிரயம் செய்கிறார். அந்த நிலத்தின் பூர்வீக உரிமையாளர் செல்வநாயகம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவார். அவருக்கு 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அந்த நிலம் நிபந்தனைக்குட்பட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம் பஞ்சமி நிலம் என்ற விவரத்தைப் பெருந்துறை வட்டாட்சியர் தெரிவித்ததன் அடிப்படையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் நிலத்தை வாங்கியவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டுமெனவும், நிலத்தைத் தன் பெயரில் பதிவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் இதே போன்றதொரு வழக்கில் நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அளித்த தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு ஒன்றையும் (State of Rajastan and Others Vs. Aanjaney Organic Herbal Private Limited reported in 2012 (9) SCALE 138.) எடுத்துக் காட்டி வாதாடியது பயனுள்ளதாக இருந்தது எனப் பாராட்டிவிட்டு, மேலும் பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கியது ரத்து செய்யப்படுவதாகத் தீர்ப்பளித்துள்ளார்.
---------------

பஞ்சமி நிலங்களை மீட்பதற்குத் தேவையானது என்ன?

நில உரிமைக்கான தலித் மக்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதன் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள காரணை என்னுமிடத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோர் போலீஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத எவர் வாங்கினாலும் செல்லாது என 2008, 2010 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பது தொடர்பில் தமிழக அரசு 1991ஆம் ஆண்டே தெளிவாக அரசாணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது. எனவே, பஞ்சமி நிலங்களை மீட்பதற்குத் தனியே ஒரு அரசாணையோ, நீதிமன்றத் தீர்ப்போ இனி தேவையில்லை. 

ஆக பஞ்சமி நிலங்களை தலித் மக்கள் அல்லாத வேறு எவரும் கிரையம் வாங்க முடியாது. அப்படி வாங்குவதற்கு வருவாய்த்துறை தடையில்லா சான்றிதழும் வழங்க முடியாது. இவை மீறப்பட்டால் அது சட்ட விரோதமானதாகும்.⚖👨‍🎓

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU