-->
Breaking News
Loading...

பஞ்சவன் மாதேவி ஈசுவரம்

#பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் பள்ளிப்படை(2), பழையாறை, கும்பகோணம்:

தமிழ்நாட்டில் ஓர் அரசிக்கு எழுப்பப்பட்ட ஒரே பள்ளிப்படை கோயில் பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் மட்டுமே. இந்த ஆலயமே இன்று இராமநாதன் கோயில் என அழைக்கப்படுகிறது. 

நுழைவாயிலில் மூன்று அடுக்கு ராஜ கோபுரம்,மேல்பகுதி செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு பார்த்த வாயில், முன் மண்டபத்தை அடுத்து மகாமண்டபத்தில் இருபுறமும் இரண்டு அழகிய சிற்பங்கள். தெற்குப்பகுதியில் இறைவயின் சன்னதி. ஏதோ ஓர் ஒற்றைக் கல் சிம்மத் தூண் காணப்படுகிறது.சுந்தரர் சிலை சுந்தரமான அழகுடன் இருக்கிறார்.

கருவறையில் பஞ்சவன் மாதேவி ஈஸ்வரத்து மகாதேவர் எனக் இக் கோயில் எழுப்பியவரால் பெயரிடப்பட்டு லிங்க வடிவில் அழகுற காட்சி அளிக்கிறார்.

ஆலயத்தின் வெளியே வலதுபுறம் உள்ள முதலாம் இராஜேந்திரரின் ஏழாம் ஆட்சியண்டு கல்வெட்டில் இவ்ஊரை முடிகொண்ட சோழபுரம் எனக் குறிப்பிடுகிறது.

கல்வெட்டில் காணப்படும் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் என்ற வரிகளில் ஏனோ 'பள்ளிப்படை' என்ற வரலாற்று உண்மையை அழிக்க முயன்றுள்ளனர்.

மேலும் இதே கல்வெட்டில் கோயில் பணியில் இருந்த ஓதுவார்கள், லகுளீச்வர பண்டிதர்கள், கணக்கெழுதுபவர், மெய்க்காவலர், மேளம் கொட்டுபவர்கள் என நீண்ட பட்டியலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிலின் வருவாய் வழியே சம்பளம் பெற்றதையும் குறிப்பிடுகிறது.

பேரரசர் இராஜேந்திரர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளின் போதும், அவருடைய அரசியின் நட்சத்திரமான ரேவதி திருநாளின் போதும், கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. கோயிலின் தீபங்கள் எரிய என பல்வேறு கொடைகளை அளித்ததை கல்வெட்டுகள் சுற்றுகின்றன.

பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் சிற்றன்னை மீது தான் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த ஒரு பேரரசால் கட்டப்பட்ட கோயில் என வரலாற்று சான்றுகள் இருந்தாலும், பலரால் அறியப்படாமல் சில ஆண்டுகள் முன்புவரை செடிகள், கொடிகள் மண்டி, குப்பை கூளமாக, வவ்வால் குடியிருக்கும் இடமாக, பார்வையிட பக்தர்கள்  வருகை இன்றி, அழிவின் விளிம்பில் இருந்தது. இதைக் கண்டு சில நல்ல உள்ளங்கள் இணைந்து கோயிலை சீர்படுத்தி பழைய பொலிவை மீட்டுள்ளனர்.

இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நண்பர் மேட்டூர், திரு மணிவண்ணன் மூலமாகத்தான் எனக்கு இந்த ஆலயம் அறிமுகம். வேலூரில் இருந்து என் குடும்பத்தோடு தரிசிக்க சென்ற போது மதியம் 2மணி ஆகி விட்டது என்றாலும்,  
கோயில் குருக்கள் வந்து ஆலயத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்து தந்தார் திரு.மணிவண்ணன்.

நிறைவான தரிசனம், அங்கே போகாதே, இதை தொடாதே, புகைப்படம் வேண்டாம்,என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நிம்மதியாக ஆலயத்தை ரசிக்க முடிந்தது. சுற்றிலும் வசிக்கும் ஊர் மக்களும் அன்புடன் பழகுகின்றனர். இராஜராஜர் பிறந்த ஊர் அல்லவா?

பிரபலமான ஆலயங்களுக்கு மட்டுமே செல்லாமல் இவை போன்ற சரித்திர முக்கியமான ஆலயங்களுக்குச் சென்றால் தான் அன்பின் வடிவமாக அமைந்த இந்த நினைவுச் சின்னங்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. இல்லையேல் தமிழ்நாட்டில் பல பழங்கால கோயில்கள் போன்று இதுவும் ஒரு நாள் காணாமல் போய்விடும். 

இப்பதிவை வாசிக்கும் அனைவரும் ஒரு முறையேனும் சென்று தரிசிக்கவும், அறியாத நட்புகளுக்கும் பகிரவும். நாம் பெற்ற ஆசிகள் அவர்களும் பெறட்டுமே.


ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU