-->
Breaking News
Loading...

First information report



முதல் தகவல் அறிக்கை
 
                        *இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக்காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்*. 



                      குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். 



                 ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். 



                        ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். 



                        பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 



                    குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். 



                         ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல்நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு. 


                   போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள்.

              காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

          இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்சன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்சன் 506 (1)ல் பதிவுசெய்தால்  காவல் நிலையத்திலிருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.


             ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.  



                           காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 


                       நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. 



             சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. 



                இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 



                  இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 



                    ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது. 

  

                   இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது. 



             குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 



               இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. 



            ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 



            சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 



              இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.  இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 



                இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது. 



                குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். 



              இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 



             இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். 



              அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். 



            இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!


            ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது.


                நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர்மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

          வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.

              முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases)என இருவகையாக பிரிக்கலாம். இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக  செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை.  பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம். இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.

              குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை  இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.  பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.

           குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர்தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable Offences)களாகும்.

         அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை,வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர்தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை
             நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences)கருதப்படுகின்றன.

         ஒருவர்இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது அவதூறு பரப்பிவிட்டார்என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார்என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார்போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர்மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.

            ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.

             எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள்  என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

             நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order)படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.

             எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.

            அவ்வாறு காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர்  தானாக வழக்கை பதிவுசெய்யவும்,பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார்பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

            குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ,  பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரிதானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.

            அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர்உ.பி அரசு,  டிவைன் ரெட்ரிட் எதிர்கேரள அரசு ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.

          மேலும்  இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர்நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused)நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

               இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர்எதிர்எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

           எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார்,பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர்  சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார்.  அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர்விசாரிக்கலாம்.  தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம்.  அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

                இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது.  அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

           மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.  இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர்தனது புகாரை காவல்துறையினர்  பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம். பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU