படிப்பு ஞானம் தராது என்பது படித்தவர்களுக்குத் தெரிவதில்லை. 'படிப்பதை மறந்துவிடு' என்று பல ஞானியர்கள் சொல்வது உண்டு. வெறுமே நூலால் எந்தப் பயனும் இல்லை என்று தபஸ்விகள் பேசுவது உண்டு. அறிந்ததிலிருந்து விடுதலை என்று உத்தமர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு வெகு தாமதமாகிறது. படிக்கப் படிக்கச் சகலமும் தெரிந்துவிடும் என்று திடமாக நம்புகிறார்கள். படிப்பு என்பது உலக வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது.
பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது. அதிகாரங்களுக்காகவும், மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதற்காகவும் வெற்றி என்கிற இலக்கு நோக்கி அழைத்துப் போவது.
ஆனால், உலகாயத வெற்றிகள், பாராட்டுகள் நிறைவைக் கொடுப்பதே இல்லை. வெற்றி பெற்றவர் யாரும் அமைதியாக வாழ்வதே இல்லை. வெற்றிக்கு அடுத்ததாக என்ன செய்வது. இன்னொரு வெற்றி என்றுதான் போக வேண்டியிருக்கிறது.
பாராட்டு வாங்கிய பிறகு என்ன செய்வது. மேலும் பாராட்டுகள் வாங்கவேண்டும் என்று ஆவல்தான் எழுகிறது. உலகாயத வெற்றிகளாலோ, சொத்து பத்து சுகங்களாலோ, பாராட்டுகளாலோ, அதிகார மேன்மையாலோ ஒரு போதும் அமைதி கிடைப்பது இல்லை.
அமைதி கிடைக்காதவரை திருப்தி ஏற்படுவதில்லை. எது மனிதருக்கு நிறைவு கொடுக்கிறது... பணமா, பாராட்டா, தாம்பத்திய சுகமா, பிள்ளைப்பேறா, அதிகாரமா? இல்லை. இவை எதுவும் தருவதில்லை.
அமைதி என்பது உள்ளே, நம்முடைய இயல்பாக இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு இடைஞ்சலாக என்ன இருக்கிறது என்று யோசித்து அப்புறப்படுத்தவேண்டும்.
இன்றைய தேதிக்கு நாலு கோடி ரூபாய் இருந்தால் போதும், நான் நிம்மதியாகிவிடுவேன் என்று எவர் நினைத்தாலும், ஒருநாளும் நிம்மதியடைய முடியாது.
பணம் இல்லை என்பது ஒரு துக்கம். பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவது ஒரு துக்கம். பணம் சம்பாதித்த பிறகு அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டுமே என்று ஒரு துக்கம். அதைச் செலவு செய்யும்போதும் துக்கம்.
எனவே , எல்லாக் காலத்திலும், எல்லா விதமாகவும் பணம் துக்கம்தான். உலக சுகங்கள் பணத்தால் வருகின்றன. ஆனால், உலக சுகங்களால் மன அமைதி வருவதில்லை.
சுகம் அனுபவித்தவரும், அனுபவிக்காதவரும், சுகம் எது என்று கேள்வி கேட்பவரும், அமைதியை நோக்கித் திரும்புகிறார்கள். தன் படிப்பு தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்து கணபதி சாஸ்திரி வாழ்ந்தார்.
காவியங்கள் பலவற்றை மிக எளிதாகச் செய்ததால் அவருக்கு 'காவிய கண்டர்' என்கிற பட்டப்பெயரும் கிடைத்தது. ஆனாலும் உள்ளுக்குள் மனம் அமைதி பெறவில்லை.
தன்னால் இயலாது, தன் படிப்பால் முடியாது, தன் முயற்சியில் இது நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளவே அவருக்குப் பல வருடங்கள் ஆயின.
திடீரென்று ஒரு நாள், அவர் தவத்தில் இருந்து எழுந்தார். மலை நோக்கி நடந்தார். 'என்னால் இயலவில்லை. என்னால் அடைய முடியவில்லை' என்று உள்ளுக்குள் கதறியபடியே பால சுவாமியின் கால்களில் விழுந்து அந்தக் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டார்.
படிப்பு அகங்காரத்தைத்தான் வளர்த்தது. என் படிப்பு அமைதியைத் தரவில்லை. கற்றவை கர்வத்தைத்தான் கொடுத்தன. அவை ஒருபோதும் உள்ளே சாந்தமாகச் செய்யவில்லை.
என்னை நான் அமைதியாக வைத்துக்கொள்ளாத வரையில் இறைவன் அங்கு வந்து எப்படிக் குடியேறுவார்? இறை தரிசனம் எனக்கு எப்படிக் கிடைக்கும்? நான் மந்திர ஜபத்தின் எண்ணிக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் இன்றைக்கு இத்தனை முடித்து விட்டேன் என்று கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவரோடு இந்தக் கர்வத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். என் கர்வம் என்னை நோக்கித்தான் இருக்கிறது.
மந்திர ஜபத்தின் எண்ணிக்கை என்னை நோக்கித்தான் இருக்கிறது. இறைவனை நினைப்பதற்கு மந்திர ஜப எண்ணிக்கையோ, என் செயலோ உதவவில்லை. எனவே, எந்த அமைதியும் எனக்குக் கிடைக்கவில்லை.
என்னுள் இருக்கிற இந்த கர்வம் எல்லாம் தொலைந்து, நான் அமைதியாக உட்கார்ந்து, உள்ளுக்குள்ளே என்னை இனம் கண்டு கொள்ளவேண்டும். தயவு செய்து, சத்குரு, ஞானச்செல்வரே எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள்.
சத்குரு, நான் உங்களைச் சரணடைந்தேன். உங்கள் கால்களை இறுகப் பிடித்துக் கொண்டேன். நான் உங்கள் காலடியில் முற்றிலும் என்னை இழந்து உங்கள் வசமானேன்.
நான் என்ற வஸ்து இங்கு இல்லை. சத்குரு, என்னை உங்கள் கால்களில் பொசுக்கி, அழித்து வெறுமே நிற்கிறேன். நான் எதுவும் இல்லை. நீங்கள் என்னுள் புகுந்து, எனக்குள் அமைதியை ஏற்படுத்துங்கள்' என்று வாய்விட்டுக் கதறினார்.
அவர்கள் இரண்டு பேரும் சந்தித்த அந்த நேரம், விரூபாக்ஷி குகையில் எவரும் இல்லை. மகத்தான ஓர் அமைதி மட்டுமே அங்கு நிலவியது. எழுந்து முகம் துடைத்துக்கொண்டு கணபதி சாஸ்திரி பால சுவாமியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பால சுவாமியின் கருணைக் கண்கள், காவியம் கண்ட கணபதி சாஸ்திரியின் கண்களை கருணையோடு நோக்கின. 'என்னுள் இருப்பதே உன்னுள்ளும்' என்று சொல்லாமல் சொன்னது.
தன்னுள் இருக்கிற அந்தப் பரம்பொருளை, தன் கண்களின் வழியே, எதிரே இருக்கிற பரம்பொருளை நோக்கி, பால சுவாமி செலுத்தினார்.
இது ஓர் அற்புதமான நயன தீட்சை. தாம்தான் எங்கும் இருக்கிறோம் என்ற நினைப்பின் விகசிப்பு. அந்தக் கண்கள் வழியே பொங்கி, கணபதி சாஸ்திரி கண்களைத் தாக்கி, அவருக்குள்ளே இருக்கிற அந்தப் பரம்பொருளைத் தொட்டு அசைத்தது.
மனம் விரிந்தது. அமைதி குடியேறிற்று. இறைவன் எங்கிருக்கிறார்? எல்லா இடத்திலும் இருக்கிறார். என்னை, நான் மறைத்துக் கொண்டிருக்கிறேன். என் கண்களை, நான் மூடிக் கொண்டிருக்கிறேன்.
என் கர்வம் என்னைப் பிணைத்துக் குப்புறப் போட்டிருக்கிறது. என் திமிர், என் கண்களை மறைத்துவிடுகிறது. நான் பார்க்க இயலாதவனாக, பேச இயலாதவனாக, உணர இயலாதவனாக வெறுமே பல்வேறு கலைகளில் கட்டுண்டு கிடக்கிறேன்.
அந்தக் கட்டுகளை அறுத்துவிட்டு நிமிர, எதிரே இறை இருப்பது தெரிகிறது. இறைவன் பார்வை உன்னைத் தாக்குகிறது. எல்லா இடத்திலும் இருக்கிற இறைவன், உன்னை மிகுந்த கவனத்தோடு, பிரியத்தோடு அணைத்துக் கொள்கிறார்.
இறை என்பது உனக்கும் எனக்கும் நடுவில், எல்லோருக்கும் மத்தியில், எல்லோருடைய நெஞ்சிலும் உறைகிற ஒரு விஷயம். தெரிந்துகொள்ளத்தான் எவரும் முயற்சி செய்வது இல்லை. அப்படித் தெரிந்தவர், உன்னுள் இருக்கிற இறைவனை, அதோ அங்குதான் என்று சுட்டிக்காட்ட, உனக்கு அது தெரிந்துவிடுகிறது.
அவர் சுட்டிக் காட்டத் தயாராக இருக்கிறார். பார்க்க, உனக்கு ஒரு யோக்கியதை வேண்டும். பார்க்க உனக்கு ஒரு பணிவு வேண்டும். ஓர் ஏக்கம் வேண்டும். பார்ப்பதற்கு உனக்கு உண்மையிலேயே ஓர் ஆசை வேண்டும்.