ஒருவர் அவசியம் வாசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற 10 புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா? தற்சமயம் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“நல்ல நூல்களைப் பத்துக்குள் அடக்குவது சிரமமே. இருந்தாலும் வடிகட்டுகிறேன். ராகுல சாங்கிருத்தியாயனனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, டேவிட் அட்டன்பரோவின் ‘பரிணாமத்தின் பாதை’, ஜியாங் ரோங்கின் ‘ஓநாய் குலச்சின்னம்’, எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’, ஜான் பெர்கின்சின் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, பிரேம்நாத் பசாஸின் ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’, கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’, பில் பிரைசனின் ‘அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு’, ‘மனுதரும சாஸ்திரம்’ ஆகிய பத்து நூல்களோடு ஆண்டாளின் கவிதைகளையும் சங்க இலக்கியமும் பயில்வது அவசியம் எனக் கருதுகிறேன்.
தற்போது, பழந்தமிழர் வாழ்வு மற்றும் பண்பாடு குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பி.டி.சீனிவாச அய்யங்கார், கே.என்.சிவராஜப் பிள்ளை, டி.ஜி.ஆராவமுதன் ஆகியோர் நூல்களைப் படிக்கிறேன். தமிழில் அரிய தகவல்கள் அடங்கிய ‘சுளுந்தீ’ நாவலை வாசித்து முடித்துள்ளேன்.”